Breaking News

வீட்டை விற்கப் போகிறீர்களா?



“என் வீட்டை விற்பது ஒரு பிரச்சினையே இல்லை. இந்தக் காலத்தில் நல்ல இடத்தில் வீடுகள் அதிகம் விற்பனைக்கு வருவதில்லை. அப்படியிருக்க நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு வந்து வாங்கிச் செல்வார்கள்” என்று என் நண்பர் ஒருவர் நினைத்தார். ஆனால் நடந்தது வேறு. பலரும் வந்து வீட்டைப் பார்த்தார்கள். ஆனால் யாரும் நண்பர் குறிப்பிட்ட விலைக்கு அதை வாங்க முன்வரவில்லை. இத்தனைக்கும் என் நண்பர் அப்படியொன்றும் பேராசைத்தனத்துடன் விலையை நிர்ணயிக்கவில்லை.

வீடுகளை வாங்குவது, விற்பதில் அனுபவமுள்ள ஒருவரைக் கேட்டபோது வீட்டை விற்க நினைப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

வீட்டை வெள்ளையடித்து நெடுங்காலமாகி இருந்தால் அதை வெள்ளையடித்த பின் விற்பதுதான் நல்லது. ‘விற்கத்தானே போகிறோம். இது எதற்கு வீண் செலவு?’ என்று நினைப்பது தவறு. பாழடைந்த வீடாகக் காட்சியளிக்கும் ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். வெள்ளையடிப்பதற்காக நீங்கள் செலவழிக்கும் பணத்தைவிட அதிகமாகவே விற்பனை விலை அதிகரிக்கும்.

சிலர் தன் வீட்டிலிருக்கும் அறைக்கலன்களுடன் சேர்த்து வீட்டை விற்கத் தயார் என்பார்கள். கரும்பு தின்னக் கூலியா என்பதுபோலப் பலரும் இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும். ஆனால் மிகவும் பழமையான அறைக்கலன்களை அங்கு வைத்திருந்தாலோ குறைபாடுள்ள, பழுதடைந்த அறைக்கலன்கள் வைத்திருந்தாலோ அந்த வீடு உடனடியாக விற்பனையாகாது. வாங்குபவருக்கு அந்த அறைக்கலன்கள் பிடிக்காமல் போகலாம். மேலும் அது வீடு வாங்கும் அவர்களது எண்ணத்தையும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் அவர் வீட்டை வாங்காமல் போக வாய்ப்பு உண்டு. தவிர மிகவும் பழைய அறைக்கலன்கள் என்றால் அந்த வீடு மிகவும் பழையது என்பதை அது கோடிட்டுக் காட்டுவதுபோல இருக்கும்.

“நான் உங்கள் வீட்டை விற்றுத் தருகிறேன். இவ்வளவு சதவிகிதம் கமிஷன் கொடுங்கள்’’ என்று கூறிக் கொண்டு சில தரகர்கள் முன்வரலாம். அவர்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். வலைதளங்களும்கூட இந்த விதத்தில் உதவலாம். “சமீபத்தில் யாருடைய வீட்டை விற்றீர்கள்?’’ என்று விவரங்களைக் கேட்டறிந்து, அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களது அனுபவத்தைக் கேட்டறியலாம். 
நன்றி
தி இந்து


No comments