தினசரி வாழ்வை எளிதாக்க சில குறிப்புகள்
நான் சொல்லப்போவதை யாருமே கேட்கமாட்டார்கள்! ஆனாலும் சொல்லுகிறேன்:
- ஒருநாளும் கடன் வாங்கி அதன் மூலம் கிடைக்கும் எந்த உபரி சுகம், சௌக்கியத்தையும் அனுபவிக்க முனையாதீர்கள்.
- சொந்தமாக வீடோ அடுக்ககமோ வாங்காதீர்கள். தாராளமாக வாடகையைக் கொடுத்துக்கொண்டு உங்களுக்கு வசதியான ஒரு இடத்தில், தேவையான அளவுள்ள ஒரு வீட்டில் குடியிருங்கள். வீட்டுக்கடனும் வாங்கவேண்டாம்; பிடிக்காத ஓர் தொலைவில், உங்கள் பட்ஜெட்டுக்கு உட்பட்ட ஒரு சிறிய அளவில், காற்றோட்டம் இல்லாத ஒரு வடிவமைப்பில் வீடு வாங்கி, அதில் போய் குடியும் இருக்காமல், வாடகைக்கு விட்டு வீட்டுக்கடனை அடைக்க முனையாதீர்கள்.
- திருமணத்துக்கு அன்று ஒருநாள் மட்டுமே அணியக்கூடிய கோட்டு சூட்டு வாங்கி காசை வீணாக்காதீர்கள்.
- பெண்கள் பட்டுப்புடவை வாங்காதீர்கள். கேட்டால், பட்டுப்பூச்சிகளைக் கொல்வது உடன்பாடில்லை என்று என்கிற ரீதியில் முகத்தை மிதப்பாக வைத்துக்கொண்டு சொல்லுங்கள்!
- ஊரைக்கூட்டி, பாதி கல்யாணச் செலவு செய்து திருமண நிச்சயதார்த்தம் செய்யாதீர்கள். இரு வீட்டுப் பெரியவர்களை மட்டும் கூப்பிட்டு எளிமையாய் அந்தக்காலத்தில் செய்ததுபோல் பாக்கு வெற்றிலை மாற்றிக்கொள்ளுங்கள். திருமண விழாக்களில் ஆடம்பரத்தைக் குறையுங்கள்.
- யோகா கற்றுக்கொண்டு வீட்டிலேயே ஒழுங்காய்ப் பயிற்சி செய்யுங்கள்; நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்; ஜிம்முக்கு பணம் கட்டிப் பாதிநாள் போகாத வழக்கத்தைக் கைவிடுங்கள்!
- நடந்துபோகக் கூடிய தூரத்திற்கு நடந்தே போங்கள்; இரு சக்கர வாகனத்தில் போகக்கூடிய தூரத்துள்ள ஒரு வேலைக்குக் காரை எடுக்காதீர்கள்.
- பெரு நகரத்தில் வாழ்பவரானால் காரை விற்றுவிடுங்கள்; இப்போது எங்கும் எப்போதும் ஓலா, ஊபர் இருப்பதால், சாலை சந்தடி நெரிசலில் பதற்றத்துடன் நீங்களே ஓட்டாமல், பின்னால் உட்கார்ந்துகொண்டு ராஜா போல நீங்கள் பயணிக்கலாம்!
- வெளியே ஓட்டலில் உணவருந்துவதை எத்தனை குறைக்க முடியுமோ அத்தனை குறைத்துவிடுங்கள். செலவும் மிச்சம், ஆரோக்கியமும் உயரும். ஆனால் மனைவியின் ஒத்துழைப்பின்றி இது இந்தக் காலத்தில் நடக்காது!
- அனாவசியமான பயணங்கள், ஊர் சுற்றல் இவற்றைக் குறையுங்கள். குடும்பத்துடன்,குழந்தைகளுடன் கூடுதல் நேரம் செலவிடுங்கள்.
- நட்பு வட்டத்தைச் சிறிதாக்குங்கள். எல்லா தூரத்து உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் (காது குத்தல், மஞ்சள்நீராட்டு விழா, அவர்கள்குழந்தையின் நான்காவது பிறந்தநாள் கேக் வெட்டல் இன்ன பிற) போக வேண்டிய அவசியமில்லை.
- உங்கள்குழந்தையின் பிறந்தநாளைக் கோயிலில் போய்க் கும்பிட்டுக் கொண்டாடுங்கள் போதும். அக்கம் பக்கம், நண்டு சிண்டு, நட்பு எல்லாரையும் கூப்பிட்டுக் கூத்தடிக்க வேண்டாம். நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் மகன், உங்கள் வயதான காலத்தில் உங்களை அம்போ என்று விட்டுவிட்டு வெளிநாட்டில் போய்த்தான் குடியேறுவான்!
- மாத சம்பளம் வந்ததும் உங்கள் முதல் செலவு, சேமிப்பாக இருக்கட்டும்.
- தொலைக்காட்சிப் பெட்டியை விற்றுவிடுங்கள். உங்களுக்கு எந்தமாதிரி பொழுதுபோக்கு பிடிக்குமோ அதை இணையம் மூலம் மடிக்கணினியில் பார்த்தால் போதுமே?
- உங்களுக்கு எது பெரிதாய் ஓன்றும் விருப்பமில்லையோ, எது உங்களுக்குத் துன்பக் கலப்பு மிகக் குறைவாயுள்ள ஆனந்தத்தைத் தரவில்லையோ, எது உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் நிம்மதியைத் தரவில்லையோ அது உங்கள் அலுவலக சகாவுக்கோ, உங்கள் மைத்துனருக்கோ, உங்கள் மனைவியின் மிக நெருங்கிய தோழியின் கணவருக்கோ, பக்கத்து வீட்டுக்காரருக்கோ, மாமியாருக்கோ மிகவும் பிடித்த, மிகவும் கௌரவத்தைத் தருகிற, பீற்றிக்கொள்ளத்தக்க ஒன்றாய் இருந்தாலும் உங்களால் அதை உங்கள் வாழ்க்கையில் காப்பியடிக்காமல் ஒதுக்கித்த தள்ள முடியுமா? அது போதும்! உங்கள் வாழ்க்கை பெரிதும் எளிதாகிவிடும்!
- முடிந்த அளவு கைப்பேசியின் உபயோகத்தைக் குறையுங்கள் (இதை எனக்கும் சேர்த்துச் சொல்லிக்கொள்கிறேன்!). நடைப்பயிற்சிக்கு வெளியே போகும்போது, கோவிலுக்கு, உபன்யாசத்துக்கு, சத்சங்கத்துக்கு, பஜனைக்கு இங்கெல்லாம் போகும்போது கைப்பேசியை விட்டுவிட்டுப் போங்கள் அல்லது ஞாபகமாய் அணைத்து வையுங்கள்.
- குழந்தைகள் உங்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக அவர்கள் கையில் கைப்பேசியைக் கொடுத்து அதில் விளையாடப் பழக்காதீர்கள்.

No comments